தமிழ்நாடு

tamil nadu

வெள்ளலூர் பேரூராட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாகத் தேர்தல் ரத்து

By

Published : Mar 4, 2022, 3:01 PM IST

கோவை மாவட்டம், வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்களை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

தேர்தல் ரத்து
தேர்தல் ரத்து

கோவை:வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். இதனால், இரண்டாவது முறையாக வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக தக்க வைத்தது.

மாவட்டம் முழுவதும் திமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், இப்பேரூராட்சியையும் கைப்பற்ற முடிவு செய்ததாகத் தெரிகிறது. இதனால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் நேற்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இன்று (மார்ச் 4) தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து, அதிமுக உறுப்பினர்கள் கார் மூலம் வெள்ளலூர் வந்து கொண்டிருந்தனர்.

அதிமுக - திமுகவினர் இடையே வாக்குவாதம்

அப்போது, வெள்ளலூர் அருகே 3 கார்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அதிமுக உறுப்பினர்கள் வந்த கார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் உறுப்பினர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின், குறித்த நேரத்திற்குத் தேர்தல் நடக்கும் பேரூராட்சி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால், அவர்கள் காயங்களுடன் கிளம்பிச் சென்றனர். ஏற்கெனவே, அங்கு காத்திருந்த திமுக உறுப்பினர்கள், தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் நிலையில், இருதரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தேர்தல் ரத்து

ஏற்கெனவே, பதற்றமான சூழல் காரணமாக குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர், உறுப்பினர்களை மட்டும் பேரூராட்சி அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். மற்றவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, பேரூராட்சி அலுவலகத்திற்குள் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இதன் காரணமாக, தேர்தல் நடத்தும் அலுவலரான செயல் அலுவலர் பாலசுப்ரமணி, சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், மற்றொரு தேதியில் தேர்தல் நடக்கும் எனத் தகவல்

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

இதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், மற்றொரு தேதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், சம்பவம் குறித்துக் கேட்டறிந்தனர். தொடர்ந்து தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

மற்றொரு இடத்தில் தேர்தல் ரத்து

அன்னூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் சுயேச்சை - 4 வார்டுகளிலும், காங்கிரஸ் - 1 வார்டிலும், பாஜக - 1 வார்டிலும், திமுக - 7 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தன. இதில், பெரும்பான்மையான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வென்றுள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே அன்னூர் பேரூராட்சியில் சுயேச்சையாக வென்று பேரூராட்சி துணைத் தலைவராக இருந்த விஜயகுமார் என்பவர், இம்முறை திமுக சார்பில் 10ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவரை பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. இருப்பினும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக திமுக சார்பில் 6ஆவது வார்டில் போட்டியிட்ட பரமேஸ்வரன் பேரூராட்சித் தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுகவினர் ரகளை

இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலகத்தில் திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் வாக்குச்சீட்டுகள் கிழிக்கப்பட்டு அலுவலக ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனையடுத்து, இரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஒத்திவைப்பு

இதனால், பேரூராட்சி அலுவலக வளாகம் பதற்றமான சூழலில் காணப்பட்ட நிலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், அன்னூர் பேரூராட்சித் தலைவருக்கான போட்டியில் திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு மறைமுகத்தேர்தல் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது‌.

இதையும் படிங்க: மறைமுக தேர்தல் முடிவுகள் : சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டு கால வரலாற்றில், இது ஒரு மைல்கல்

ABOUT THE AUTHOR

...view details