கோவைமாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மருதமலை ஐ.ஓ.பி.காலனியிலுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதி மற்றும் சத்துணவு வசதி இல்லை என்று புகார் எழுந்துள்ளது.
ஆட்டோவில் வரும் மற்றொரு பள்ளியின் உணவு:இந்தப் பள்ளியில் சத்துணவுக் கூடம் இருந்தபோதும், அங்கு மாணவர்களுக்கு உணவு சமைக்கப்படுவதில்லை. இதன்காரணமாக மாணவர்களுக்கு அருகேயுள்ள கல்வீரம்பாளையம் தொடக்கப் பள்ளியில் சமைக்கப்படும் சத்துணவு ஆட்டோவில் கொண்டு வரப்படுகிறது. அப்படிக்கொண்டு வரப்படும் சத்துணவும் மூடப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு வரப்படுகிறது.
மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம்: இதன் காரணமாக, மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் புகார் அளித்தாலும் அவர்கள் முறையான பதில் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கெனவே, பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும், போதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை எனவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அச்சுறுத்தல் தரும் பள்ளி சூழல்:அதேபோல, பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்க், தண்ணீர் தொட்டி ஆகியவை மூடப்படாமல் இருப்பதால், மாணவர்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டியநிலைக்குத்தள்ளப்பட்டு இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி இல்லை எனவும், கழிவறைப்பகுதியில் புதர் மண்டிக்கிடக்கின்றன என்றும்; செப்டிக் டேங்க் அருகேயுள்ள கட்டடம் பழுதடைந்து சாய்ந்த நிலையில் இருப்பதாகவும், பள்ளி சுற்று சுவர் விரிசல் அடைந்து கிடப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.