தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் அங்கு புகார் அளிக்க வருபவர்கள், காவல் துறைக் கண்காணிப்பாளரை நேரில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கு மாற்றாக ஜூம் செயலி மூலம் புகார் தெரிவிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வருபவர்கள் வரவேற்பறையில் வைக்கப்பட்டுள்ள லேப்டாப் மற்றும் கேமராக்களின் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம். அப்புக்கார்களின் மீது நேரடியாக மாவட்ட கண்காணிப்பாளர் அவரது அறையில் இருந்து லேப்டாப் வழியாக விசாரிப்பார். இந்த நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.