தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் உரிய ஆவணம் இல்லாமல் 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

கோவை: தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கார் மூலம் கொண்டு செல்லப்பட்ட 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் உரிய ஆவணம் இல்லாமல் 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

By

Published : Apr 5, 2019, 10:46 PM IST

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிங்க்ஸ் என்னும் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் இயங்கி வருகின்றன. தங்க பெட்டகம் போன்று செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்தில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு சொந்தமான தங்க கட்டிகளை சேகரித்து வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் கிளையிலிருந்து ஏழு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 149 கிலோ எடையிலான தங்க கட்டிகளுடன் அந்நிறுவனத்தின் டெம்போ வேன் ஒன்று டவுன்ஹால் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதையடுத்து புளியகுளம் பகுதியில் அந்த வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது வாகனத்தின் உள்ளே தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதற்கான உரிய ஆவணங்களை வாகனத்தில் வந்தவர்கள் சமர்ப்பிக்காததையடுத்து தங்க கட்டிகளுடன் வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே தங்கநகை உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட நகையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் 25-க்கும் மேற்பட்ட தங்கநகை உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்க நகையை மீட்டுக் கொள்ளலாம் என கூறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details