சென்னை: கோயில் திருவிழாவில் நகையைத் திருடிய பெண் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் பல தகவல்களை வழங்கியுள்ளார்.
சென்னை தாழம்பூர் பகுதியில் அமைந்துள்ள மேலக்கோட்டையூர் கோயில் மற்றும் கேளம்பாக்கம் அம்மன் கோயிலில் கடந்த மாதம் 1ஆம் தேதி திருவிழா நடந்தது. அப்போது இரு கோயில்களிலும் நடைபெற்ற திருவிழாவின் போது ஒரே நாளில் 8 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன.
இதனால் உடனடியாக தாழம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரு பெண்கள் டிப்டாப் ஆக கோயிலுக்குள் நுழைந்து கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நூதன முறையில், அதாவது பெண்களிடம் சென்று, புடவையால் நகையை மூடி நைசாக பறித்துச் செல்வது போல் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.
விரட்டிப்பிடித்த காவல்துறை:குறிப்பாக சிசிடிவியில் முக அடையாளங்கள் தெளிவாக தெரியாததால், ஆர்டிஸ்டை வரவழைத்து செயின் பறிக்கும் பெண்ணை வரைந்துள்ளனர். பின்னர் வரையப்பட்ட படத்தை வைத்து சுமார் 30க்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகளுடன் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது எதுவும் சிக்கவில்லை.
பின்னர் அவர்களின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது இரு பெண் குற்றவாளிகளின் செல்போன் எண், அதனை சுற்றிய பகுதிகளில் சம்பவத்தின் போது இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக தனிப்படை அமைத்து செல்போன் எண்ணை டிராக் செய்யும் போது, 4 நாட்களாக நிற்காமல் கேரளாவை நோக்கி அவர் சென்றதை அறிந்து, துரத்தி சென்று பாலக்காடு பகுதியில் வைத்து ஒரு பெண்ணை கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்த பெண்ணை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தும் போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர் கூடுவாஞ்சேரி மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி(27) என்பதும் இவரது கணவர் அஜித், ஓட்டுநராகப் பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.