நீட் தேர்வுக்கு எதிரானவன்தான் நான் என்று பழனிசாமி சொல்லிக் கொள்வதைப் போல கபடநாடகம் வேறு இருக்க முடியுமா, அப்படி எதிரானவராக இருந்திருந்தால், அனைத்துக் கட்சியினரும் தமிழ்நாடு அரசோடு கைக்கோத்து, பாஜகவின் முயற்சியை முறியடிக்க உயர் நீதிமன்றத்தில் களமிறங்கியபோது, தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தது ஏன் என்று விளக்க முடியுமா என்று முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கடுமையாகச் சாடியிருந்தார்.
மேலும், "பாஜகவின் இரட்டை வேடம், அதிமுகவின் அடிமைச் சேவகம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, தனது தீர்ப்பின் மூலம் நெத்தியடி கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்" எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நீட்டுக்குத் தயாராகணுமா, வேணாமா? - நேரடியாகச் சொல்லுங்க ஸ்டாலின்
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திமுக தன்னுடைய தேர்தல் பரப்புரையின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியது.
நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர்களது இளைஞர் அணித் தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர்கள் வரை தேர்தல் மேடைகளில் வெற்று முழக்கமிட்டு, மக்களைத் திசை திருப்பி, வெற்றியும் பெற்றுவிட்டனர்.
நான், கடந்த மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின் மீது பேசும்போதுகூட, நீட் தேர்விற்குத் தமிழ்நாட்டு மாணவர்கள் தயாராக வேண்டுமா, வேண்டாமா? என்பதற்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள் என்று கேட்டேன்.
சட்டப்போராட்டத்தால் நீட்டுக்கு விலக்குப் பெற்ற ஜெ.
ஆனால், அதற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் நேரடியாக எந்தப் பதிலும் தரவில்லை. நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரையின்பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் அளித்தனர்.
நம் நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இன்றுவரை பல்வேறு திருப்பங்களைத் தமிழ்நாட்டு மாணவர்கள் சந்தித்துள்ளனர். திமுக அன்று அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில், மத்திய அரசிதழ் நாள் 2010 டிசம்பர் 21இல் நீட் தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டது.
அப்போது, குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுகவின் காந்திசெல்வன் இணை அமைச்சராகவும் பதவி வகித்தனர். 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல் 2016 வரை, அவர் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற்றார்கள்.
அதைத் செய்தது ஸ்டாலினின் கூட்டாளிகள்தான்
உச்ச நீதிமன்றம் 2016 மே 9ஆம் தேதியிட்ட தீர்ப்பில் நீட் தேர்வின் மூலம்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறியது. எனது தலைமையிலான ஜெயலலிதாவின் அரசு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 2017 ஜனவரி 31 அன்று சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.
ஆனால், மத்திய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கவில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் வரும்வரை 85 விழுக்காடு தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், 15 விழுக்காடு மத்திய வாரியங்களில் படித்த மாணவர்களுக்கும் என அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை 2017 ஜூலை 14 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் நிராகரித்து உத்தரவிடப்பட்டது.
மேலும், 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, மறுசீராய்வு மனுவைத் (Curative Petition) தாக்கல் செய்தது, நீதித் துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் உச்ச நீதிமன்றத்தில் அதை விசாரிப்பதற்கென்றே தனியாக நீதிபதிகள் குழுவை நியமிக்கச் செய்தது, ஜெயலலிதா பெற்ற ஆணையை ரத்து செய்தது இன்றைய முதலமைச்சரின் கூட்டாளிகள்தான் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை.
நீட்டிலிருந்து விலக்கு கேட்டு போராடியவர் ஜெ.
எந்தச் சூழ்நிலையிலும், யாராலும் இந்தியாவில் நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்று கொக்கரித்ததும் அந்தக் கூட்டாளிகள்தாம். கோவிட் 2019-ஐத் தொடர்ந்து, தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வினை 2020-2021ஆம் கல்வியாண்டிற்கு ரத்துசெய்தது.
பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவச் சேர்க்கையினை கொண்டுவரும் வகையில், மருத்துவக் கழகச் சட்டம் 1956 மற்றும் பல் மருத்துவச் சட்டம் 1948, அதனுடன் தொடர்புடைய இதரச் சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள ஒரு அவசரச் சட்டத்தினை உருவாக்கித் தர வேண்டி, பாரதப் பிரதமர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு எனது தலைமையிலான அரசு 2020 ஜூலை 8 அன்று கடிதம் அனுப்பியது.
மேலும், 2020 ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்ற மாநில சுகாதாரத் துறைச் செயலர்கள் அளவிலான காணொலி கூட்டத்தின்போதும், மேற்கூறிய தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது. ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கேட்டும் மத்திய அரசிடம் ஜெயலலிதாவின் அரசு கடுமையாகப் போராடியது.
ஏ.கே. ராஜன் குழு
தற்போதைய திமுக அரசு, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து அறிய அமைத்த குழு, உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கிற்குப் பதில் மனு தாக்கல்செய்த திமுக அரசு, நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மட்டுமே இந்தக் குழு ஆராயும் என்றும், இந்தக் குழுவின் பரிந்துரை நீட் தேர்வு நடைபெறுவதற்கு எந்தவிதமான இடையூறையும்/பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இந்தக் குழு அமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.
மேலும், இது அரசின் கொள்கை முடிவு, இதற்கு எதிராக யாரும் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், இந்தக் குழு அமைக்கப்பட்டதால் இந்த மனுதாரர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.
வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் ஸ்டாலின்
உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்த 14 பக்க தீர்ப்பில், இந்த அரசு தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள வாசகங்களை அப்படியே குறிப்பிட்டு, குழு அமைத்தது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதற்கு எதிரான இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளது.
இதைத் தவிர, இந்தக் குழு நீட் தேர்வினை ரத்துசெய்ய அமைக்கப்பட்டிருப்பதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவினுடைய பரிந்துரைகளைச் செயல்படுத்துவதன் மூலம், நீட் தேர்வு ரத்துசெய்யப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த பதில் மனுவில் திமுக அரசு குறிப்பிடவில்லை.
உயர் நீதிமன்றம் நேற்று, ஏ.கே. ராஜன் குழுவிற்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், ஏதோ இன்றே இந்த அரசு தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டதுபோல, ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
- தேர்தல் நேரத்தில், ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்துசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும்; அதற்கான வழி எங்களுக்குத் தெரியும் என்றும் வாய் வீரம் காட்டிய ஸ்டாலின் தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக என் மீது பழி சுமத்தியுள்ளார்.
எங்களைப் பார்த்து, “பாதம் தாங்கிகள், எதிர்க்கட்சியான பிறகும் பாஜகவின் அடிமைகள்’’ என்றெல்லாம் அரசியல் நனி நாகரிகமின்றி, தான் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கான தகுதியை உணராமல், அறிக்கை என்ற பெயரில் நஞ்சை கக்கியிருக்கிறார்.
1999-2004 காலக்கட்டத்தில் மத்திய பாஜக அரசில் பங்குகொண்டு, ஐந்து ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்து, 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 26 இடங்களை அள்ளி வழங்கி குலாவியபோதும், இவர்கள் எதைத் தாங்கிக் கொண்டிருந்தார்கள் என்று திருப்பிக் கேட்க எங்களுக்கு ஒரு நிமிடம் ஆகாது. ஆனால், எம்ஜிஆர், ஜெயலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட நாங்கள், அநாகரிகமாக நடந்துகொள்ள மாட்டோம்.
- சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
என்ற வள்ளுவர் வாக்கின் பொருளை முழுமையாக உணர்ந்த நாங்கள் நீட் தேர்வு முதல், தமிழ்நாட்டைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஒவ்வொரு அடியையும் மிகவும், எச்சரிக்கையாக எடுத்துவைத்துச் செயல்பட்டோம்.
இன்றைய திமுக ஆட்சியாளர்களைப் போல், எந்த வாக்குறுதியை வேண்டுமென்றாலும் அள்ளி வீசலாம், மக்களை ஏமாற்றலாம், அதிகாரம் கைக்கு வந்தபின் எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசலாம், ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை யாரும், எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்ற மமதை குணம் கொண்டுள்ளதுபோல் நாங்கள் செயல்படுவதில்லை.
நீட் கேள்விகள்
முதலமைச்சர், அமைச்சர்களின் பேச்சை நம்பி, நீட் ஒழிந்துவிடும் என்று தேர்விற்குத் தயாராகாத மாணவர்கள் மத்தியில், செப்டம்பர் மாதம் 12ஆம் நாள் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அவர்களின் தலையில் இடிபோல் இறங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் நீட் தேர்வுக்கான கல்வியை மாணவர்கள் கற்றுக்கொள்வது, நீட் தேர்வுக்குப் பின்னரும் மருத்துவரான பின்பும் அவர்களுக்குக் கைக்கொடுக்கும். நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கவே, நீட் தேர்விற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற அரிய விஞ்ஞான கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுவரை நடந்த எந்தவொரு நீட் தேர்விலும் 11, 12ஆம் வகுப்புப் பாடங்களிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டனவே தவிர, ஐந்து ஆண்டு மருத்துவப் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரியவில்லை.
நனவானது அரசுப் பள்ளி மாணக்கரின் கனவு
இப்போதும், இந்த திமுக அரசு நீட் தேர்வை ரத்துசெய்ய எந்தவிதமான, முறையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், தேர்தலுக்காக வாய் ஜாலம் காட்டிவிட்டோமே என்ற நிலையில், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று அறிவிலிகள் அரற்றுவதுபோல் பிதற்றிக்கொண்டு, நேர்மையாக நடவடிக்கைகள் எடுத்த ஜெயலலிதாவின் அரசைத் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் ஜெயலலிதாவின் அரசு, பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்துவிட்டது. 2019இல் மருத்துவம் பயில அரசுப் பள்ளிகளில் பயின்ற வெறும் ஆறு மாணவர்கள் மட்டுமே தேர்வாயினர். இந்த நிலையை மாற்றிட வேண்டும் என நான் உறுதிகொண்டேன்.
அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினோ, பொதுமக்களோ, வேறு யாரும் கோரிக்கைவைக்காத நிலையில், ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைச் சட்டமாக்கி, அரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவக் கனவை நனவாக்கினேன்.
மருத்துவ இடங்களை அதிகரித்தது அதிமுக அரசு
இதன்மூலம் 2020ஆம் கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளில் படித்த 435 மாணாக்கர் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு உண்டான மருத்துவக் கட்டணத்தை ஜெயலலிதாவின் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் நான் ஆணையிட்டிருந்தேன்.
நீட் தேர்வை ஜெயலலிதாவின் அரசு கடுமையாக எதிர்த்தபோதும், அது இருக்கும்வரை, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கரை அத்தேர்வுக்குத் தயார்படுத்தும்வகையில் பாடத் திட்டங்களை மாற்றி அமைத்ததோடு, மாவட்டந்தோறும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நீட் தேர்வுக்காகச் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு, திமுக ஆட்சி முடிவுக்கு வரும்போது 1945 மருத்துவ இடங்கள்தான் இருந்தன. ஜெயலலிதாவின் ஆட்சியில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களை அதிகப்படுத்தியதன் மூலம், சுமார் 5,400 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியதும் ஜெயலலிதாவின் அரசுதான்.
வாக்குறுதியை காப்பாற்றுங்கள் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், 17 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழிவந்த நாங்களும் நீதிக்குத் தலைவணங்கக் கூடியவர்கள்; சட்டத்தை மதிப்பவர்கள்; எத்தகையச் சூழ்நிலை வந்தாலும் மக்கள் நலனுக்காகச் சட்டப் போராட்டம் நடத்தியவர்கள்; தமிழ்நாடு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள வறிய மாணவர்களின் நலனுக்காக நீட் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள்; நாங்கள் ஆட்சியில் இருந்தவரை நீதியை நம்பி, தலை முதல் பாதம் வரை போராடியவர்கள்.
இன்றைய திமுக ஆட்சியாளர்கள் நீட் சம்பந்தமாக, தேர்தலின்போது அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'நீட்டை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் உண்மையில் வருந்தத்தக்கதே!' - ஸ்டாலின்