கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் சுங்கக் கட்டணம் வசூலிப்பதைத் தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், நேற்று முதல் மீண்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கே வழிவகுக்கும். எனவே, சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்வதுடன், மே 3ஆம் தேதி வரையில் இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலும், கரோனா தொற்று என்பது 'தேசியப் பேரிடராக' அறிவிக்கப்பட்டு, நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முகக்கவசம் அணியவும், கிருமி நாசினியைப் (சானிடைசர்) பயன்படுத்தவும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஏழை எளிய மக்களும் கூட இப்போது முகக்கவசம் அணிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிக எண்ணிக்கையில் வாங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.