சென்னை:சோழிங்கநல்லூர் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனத்தில் மென் பொறியாளாராகப் பணியாற்றி வந்த கேரளா, ஆந்திரா மாநிலங்களைச்சேர்ந்த இரு இளம்பெண்கள் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காட்டைச்சேர்ந்த லட்சுமி(23) என்பவரும்; ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த லாவண்யா(23) என்பவரும் சென்னை சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஹெச்.சி.எல் நிறுவனத்தில் மென் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு (செப்.14) இருவரும் ஒன்றாக அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது, ஓ.எம்.ஆர்.சாலையின் ஓரமாக நடந்து சென்றபோது, அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று மோதிய விபத்தில் லட்சுமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே படுகாயமடைந்த லாவண்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸில் ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அவரும் சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்.15) பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரை அப்பகுதியினர் மடக்கிப் பிடித்து போலீசாருக்கு இதுகுறித்து அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து சோழிங்கநல்லூரைச் சேர்ந்த மோதீஸ்குமார் (20) என்பவரைக் கைது செய்தனர்.
இவ்வாறு சென்னையில் வெளிமாநிலங்களைச்சேர்ந்த இரு இளம்பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இரவு பணியை முடித்துவிட்டு செல்லும் பெண் ஊழியர்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வீடு வரை தங்களது நிறுவன வாகனங்களிலேயே அழைத்துச்செல்லவேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெற்ற தாயால் கைவிடப்பட்ட பார்வையற்ற பெண் குழந்தை; நிதிப்பொறியாளராக உருவாக்கிய வளர்ப்புத்தாய்... இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி!