தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.10 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி கடத்தல் - 7 நாள்களில் 255 பேர் கைது

கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மூடைகளைக் கடத்திய, 255 பேரை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 13, 2022, 3:39 PM IST

சென்னை:உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்டத்தில் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக, கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955-ன் படி, வழக்குப்பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980-ன் படி, தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 03ஆம் தேதி முதல் 09 தேதி வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 10லட்சத்து 60ஆயிரத்து 261 ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 877 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 33 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அக்குற்றச் செயலில் ஈடுபட்ட 255 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 3 நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன் படி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஏற்காடு தலைச்சோலை கிராமம் போதைப்பொருள் இல்லாத கிராமமாக அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details