தமிழ்நாடு அரசுப் பணிக்கான தேர்வுகளில் நடைபெற்ற முறைகேட்டின் காரணமாக, பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்துவருகிறது. முக்கியமாக, ஒரே ஒரு தேர்வு மட்டும் இதுவரை நடத்தப்பட்டு வந்த குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு, இனி வரும் காலங்களில் இருநிலைகளில், அதாவது முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளுக்குச் செல்லும் நபர்கள் கொள்குறி வகைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுச் செல்வதால், அவர்களுக்கு போதுமான அளவில் கோப்புகளை எழுதத் தெரியவில்லை என கூறப்படுகிறது. மேலும், இனிமேல் அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு கோப்புகளை எழுதத் தெரிவதுடன், அவர்களுக்கு ஆங்கில மொழிப் பெயர்ப்பு போன்ற திறன்களும் இருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
எனவே, அரசின் கோரிக்கையை ஏற்று குரூப் 2, 2 ஏ ஆகிய தேர்வில் கொண்டு வரப்பெற்ற மாற்றங்களின் அடிப்படையில், குரூப் 4 தேர்விற்கான பாடத்திட்டம், எழுத்துத் தேர்வில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மொழி அறிவுத்திறன், கோப்புகள் வரைவுத் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று அரசுச் செயலாளர்கள், துறைத்தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்வாணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன.