தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மேகதாதுவில் அணைக் கட்டக் கூடாது- மு.க. ஸ்டாலின் அறிக்கை!

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

By

Published : Jun 18, 2021, 7:50 PM IST

Updated : Jun 18, 2021, 9:51 PM IST

19:46 June 18

கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டக் கூடாது, அதற்கு ஒன்றிய அரசும் அனுமதி வழங்கக் கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஒரு தலைப்பட்சமாக- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிற நிலையில் அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

இத்திட்டம் தமிழ்நாடு விவசாயிகளின் நலனுக்கு விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவினை குறைத்திடும் என்றும் கூறி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தீர்மானத்தை 28.3.2015ஆம் ஆண்டு நேரடியாக வழங்கியும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தப் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரை டெல்லியில் சந்தித்த போதும் மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியிருக்கிறேன். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது , இரு மாநில நல்லுறவிற்கு எவ்விதத்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல என்பதோடு, தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும்.

ஆகவே, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதி தீர்ப்பிற்கும் எதிரான மேகதாது அணைக் கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் மேகதாது அணைக் கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டின் சார்பில் எனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 18, 2021, 9:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details