தமிழ்நாடு தலைமை செயலகம் தமிழ்நாட்டின் மிக முக்கிய இடமாகும். இங்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசு அலுவலர்கள் என சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக இங்கு நிலவிவரும் தண்ணீர் பற்றாக்குறையை அரசு ஊழியர்களுடன் தினமும் தங்கள் கோரிக்கைகளை சொல்ல வரும் பொதுமக்களும் அனுபவித்து வருகின்றனர்.
தலைமை செயலகத்திலும் தண்ணீர் பஞ்சம்?
சென்னை: தலைமை செயலகத்தில் நிலவிவந்த தண்ணீர் பஞ்சத்தை, போர்வெல் போட்டும், தண்ணீர் தேக்க தொட்டிகளின் கொள்ளளவை உயர்த்தியும் சரி செய்துள்ளதாக தலைமை செயலக பணியாளர்களின் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக பணியாளர்களின் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி பேசுகையில்,"தமிழ்நாடு தலைமை செயலகத்தில் இருந்த தண்ணீர் பற்றாக்குறை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகை, பழைய கட்டடத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி ஐந்தாயிரம் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தலைமை செயலகத்தில் ஆறு இடங்களில் போர்வெல் போடப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறப்படுகிறது. தற்பொது போர் போடப்பட்டு நேரடியாக ஆர்.ஓ. மெஷினுக்கு செலுத்தப்பட்டு சுவையான குடிநீர் வழங்கப்படுகிறது." என அவர் தெரிவித்தார்.