தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அண்ணா பல்கலை. கல்வி கட்டணம் உயர்வு? பதிவாளர் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் துறைக்கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் ஒரு பருவத்தேர்விற்கான கல்விக் கட்டணத்தை அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்

By

Published : May 9, 2019, 5:44 PM IST

anna university

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா, உறுப்பினர்கள் உயர் கல்வித் துறை செயலர் மங்கத் ராம் சர்மா, மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் நட்ராஜ், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக பதிவாளர் குமார் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகம் 1999ஆம் ஆண்டிற்கு பிறகு கல்விக் கட்டணத்தை உயர்த்தவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டணம் குறைவாகவே உள்ளது.

எனவே அடுத்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கான ஒரு பருவ கட்டணம் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளோம்.

இதற்கு ஆட்சிமன்றக் குழுவின் கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் நியாயமானதாகத்தான் உள்ளது. தமிழ்நாட்டில் ஏழை மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காவும், கல்விக்கட்டணத்தில் அரசு உதவித்தொகை அளிப்பதையும் கருத்தில் கொண்டும் அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு புதிய கட்டணத்தை அமல்படுத்துவோம்.

மேலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்வெழுதி அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கலாம் என ஆட்சிமன்றக் குழுவின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்ந்து தேர்ச்சி பெறாமல் உள்ள சுமார் 30 ஆயிரம் மாணவர்களுக்கு வரும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் சிறப்பு தேர்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு கடைசி வாய்ப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணா பல்கலைக்கழக பதிவாளர்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்திற்கு அனுமதி, எட்டாவது செமஸ்டரில் ஒரு பாடத் தேர்வில் தோல்வி அடைந்தால் உடனடியாக மீண்டும் எழுதுவதற்கான அனுமதி போன்றவற்றுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details