சென்னை:சென்னை தாம்பரம் அடுத்த மப்பேடு ஜோசப் தெருவைச்சேர்ந்த கார்த்திக் (29) என்பவர், கடந்த மாதம் தங்க நகைகள் வாங்குவதற்காக வங்கியில் இருந்து 4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துவந்து, வீட்டில் உள்ள பீரோவில் வைத்து விட்டு, அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் கார்த்திக் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கார்த்திக் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர். பணம் காணாமல் போன நாளில் இருந்து, கார்த்திக் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த மணிகண்டன் பிரபு (29) என்பவரும் காணாமல் போனது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் மணிகண்டன் பிரபுவின் சொந்த ஊரான திருவாரூர் சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு வீட்டில் பதுங்கி இருந்த மணிகண்ட பிரபுவை, காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில், 4 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதாக மணிகண்டன் பிரபு ஒப்புக்கொண்டார்.
திருடிய பணத்தில் 1 சவரன் தங்க செயின், 2 கிராம் மோதிரம் மற்றும் இருசக்கர வாகனம் வாங்கியதாகவும், மீதமிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தில் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கியதாகவும் மணிகண்டன் பிரபு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து மணிகண்டன் பிரபுவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த நகை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: சைபர் கிரைம்; 15 நாள்களில் 6 வடமாநில குற்றவாளிகள் கைது!