தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 26, 2020, 3:14 PM IST

ETV Bharat / city

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வைக்கும் கோரிக்கைகள்! - அறிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முதலமைச்சர் பழனிசாமிக்கு வைத்திருக்கும் கோரிக்கைகள் குறித்தும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் காணலாம்.

safety measures on corona
safety measures on corona

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1980ஆம் ஆண்டு முதல் கல்வி, அறிவியல் பரப்புதல், அறிவியல் மனப்பான்மை வளர்த்தல், ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய தளங்களில் பணியாற்றி வரும் அமைப்பு.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கரோனா தடுப்பு, விழிப்புணர்வு மற்றும் வதந்திகள் மூடநம்பிக்கை பரப்புதலுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கும் செயல்பாடுகளை இந்த மனுவுடன் இணைத்துள்ளோம்.

இதுதவிர தமிழ்நாடு அரசு தனது செயல் திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டியவை என்று கீழ் காணும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

  • தற்போது இம்மாதம் 31ஆம் தேதிவரை மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் தனிமைப் படுத்துதல் இன்னும் ஒரு பத்து நாட்களாவது நீட்டிக்க வேண்டும். அந்த சமயத்தில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு ஆரோக்கியமான முறையில் சென்று சேர உத்தரவாதம் செய்ய வேண்டும்.
  • மாத சம்பளம் என்று உத்தரவாதம் இல்லாத அனைவருக்கும் அரசின் இலவச அத்தியாவசிய பொருட்கள் சென்று சேர்வதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • தனியார் மருத்துவமனைகளில் பரிசோதிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள ரூபாய் 4500 கட்டணத்தை நீக்கி அரசே அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்
  • உயர் கல்வி பயில, நடக்கவிருக்கும் நுழைவுத் தேர்வுகளை தள்ளி வைக்க பரிந்துரை செய்ய வேண்டும்.
  • வதந்திகள், போலி அறிவியல் ஆகியவற்றை தடுக்க கரோனா தொற்று நோய் தொடர்பாக எந்தச் செய்தியையும் சமூக ஊடகங்கள் வழியாக சொல்ல விரும்புவோர், தங்கள் பெயர், ஊர், அலைபேசி எண் ஆகியவற்றை பதிவுசெய்து விட்டுத் தான் கருத்துக்களை கூற வேண்டும்.
  • பொது மக்களிடம் எளிய அறிவியல் வழிமுறைகளை விளக்கி நோய் கிருமி தொற்றைத் தவிர்க்க முடியும் என நம்பிக்கை உருவாக்க ஊடக பரப்புரைகள் தேவை.
  • தகுந்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, மூன்று முதல் ஐந்து நபர்களெனச் சேர்ந்து மிகவும் பாதிப்புள்ளாக்கும் பகுதிகளில் விழிப்புணர்வுப் பரப்புரை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.
  • கரோனா தொற்றின் நிலைமையை, மாநில அரசு பள்ளி/ கல்லூரிகளை பயன்படுத்த முனைவதாக அறிய வருகிறோம். இதனைத் தவிர்த்து, முதற்கட்டமாக மாவட்டந்தோறும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகளில் குறைந்தபட்சம் முப்பது விழுக்காடு இடங்களை கரோனா சிகிச்சைக்கான தனி பிரிவுகளாக ஒதுக்கிட வேண்டும். இதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும். ஒவ்வொரு தனியார் மருத்துவ மனைக்கும் ஓர் அரசு மருத்துவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு கண்காணிப்பட வேண்டும்.

என்று கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய நாட்கள் மிகக் கடினமாக இருக்கப்போகிறது. அதற்கு ஏற்றவாறு நம் சக்தியை முழுமையாக பயன்படுத்தி நமது சமுகக் கடமையை ஆற்ற வேண்டும். உலகளாவிய கரோனா தொற்று நோய் இந்தியாவில் இரண்டாம் கட்டத்தில் இருப்பதாக தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் கூறிவருகின்றன.

ஆனால், மூன்றாம் கட்டத்தை முன்பே அடைந்துவிட்டோம் என்பதை நன்கு உணர முடிகிறது. மூன்றாம் கட்டத்தை அடைந்துவிட்டாலே நான்காம் கட்டத்தை அடைந்து அதன் விளைவுகளை எதிர்கொண்டே ஆக வேண்டிய நிலை. அதன் அடிப்படையில்தான் நிபுணர்கள் "இந்தியாவில் 30 முதல் 60 விழுக்காடு மக்களை நோய் தாக்கலாம்" என்ற கணிப்பை முன் வைக்கிறார்கள்.

சிவில் சமூகத்தில் எப்படி பரவிவருகிறது என்பதற்கு சனிக்கிழமை ஒரு ஆங்கில நாளேட்டின் நடுப்பக்க கட்டுரையே சாட்சி.

1. முதல் கட்டம் என்பது வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்குள் நோய் தொற்றுடன் வருபவர்கள்.

2. இரண்டாம் கட்டம் என்பது அவர்கள் மூலம் அவர்களது உறவினர்கள் நண்பர்களுக்கு பரவுதல்.

3. மூன்றாம் கட்டம் என்பது இந்த இரு பிரிவினருக்கும் தொடர்பு இல்லாத பொதுமக்களுக்கு பரவுதல்.

4. நான்காம் கட்டத்தில் சிவில் சமூகத்தில் மிகப் பரவலாக பரவி, பலருக்கும் நோய் தொற்று பரவுதல்.

நாம் தற்போது ஒரு நெருக்கடியான நிலையில் இருக்கிறோம் என்பதே யதார்த்தம். இந்த யதார்த்தத்தை நாம் முதலில் உள்வாங்கிக் கொண்டு களத்தில் இறங்கவேண்டும்.

  • நிர்வாகிகள் குழு முடிவுகள் அடிப்படையில் மாநில மாவட்ட அளவில் பத்திரிகையாளர் சந்திப்பு/ பத்திரிகை செய்தி அளித்தல்.
  • நாம் வெளியிட்டுள்ள கரோனா புத்தகத்தின் மென் நகலை சமூக வலைதளங்களில் பரவலாக கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்தல்.
  • புத்தகங்கள் கைக்கு கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியரையும், மாநகராட்சி மற்றும் மாவட்ட இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் ஆகியோரையும் சந்தித்து புத்தகங்களைக் கொடுக்க வேண்டும். நமது பரப்புரைத் திட்டத்தின் சாரத்தை சுருக்கமாக எடுத்துக் கூறுதல் வேண்டும்.
  • கரோனா நோய் கிருமியின் அறிவியலை மட்டும் தனியாக ஒரு காணொலியாக தயார் செய்வது.
  • வதந்திகள், மூட நம்பிக்கைகள், போலி அறிவியல் ஆகியவற்றை விலக்கி உண்மையைப் புரிந்துகொண்டு செயல்படுவது எப்படி என்று ஓர் ஆவணம் தனியாக தயார் செய்வது.
  • தொற்று நோயைப் பொறுத்தவரையில் ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு பரவுதல் என்ற தொடர் சங்கிலி கன்னியை உடைத்தால் அன்றி நோய் பரவுவதை தடுத்து நிறுத்த முடியாது என்ற உண்மையை அழுத்தம் திருத்தமாக கூறவேண்டும்.
  • மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் தனிமைப்படுத்துதல் மூலம் மட்டுமே இதனைத் தடுக்க முடியும் என்பதற்கு ஓர் வலுவான பதிவு உருவாக்கி வெளியிடுவது.
  • தனிமைப்படுத்துதல் என்ற நடவடிக்கைகள் கடுமை ஆகும்போது, ஏழை எளிய மக்கள் மிக பரவலாக பாதிக்கப்படுவர். இத்தகைய சூழ்நிலையில் அரசு போதுமான நிவாரணம் தர அரசை கோருவது. இதற்கென்று தனியாக கோரிக்கை மனு மின் அஞ்சல் வழி சமர்ப்பித்தல்.
  • மீம்ஸ், சிறுகதை, நாடகம், கேலிச்சித்திரம், கருத்துச்சித்திரம் போன்ற வடிவங்கள், அதற்கான உள்ளடக்கம் ஆகியவை தயார் செய்ய மாநில அளவில் குழு அமைப்பது. இதெற்கென நியமிக்கப்பட்டும் கன்வீனர் இதர இயக்கங்கள், தனிநபர்களை தொடர்பு கொண்டு தொடர்ச்சியாக பேசுபொருளைக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும்.
  • மாவட்டந்தோறும் ஒரு ஆர்வலர்கள் பட்டியலைத் தயார் செய்வது. சாத்தியமான கள பணிகளை அவர்கள் மூலம் செய்வது.
  • ஏப்ரல் மாத துளிரை மின் இதழாக தயாரித்து பரவலாக கொண்டு வருவது.
  • கரோனாவை சிறப்பான முறையில் எதிர்கொண்ட, எதிர்கொண்டு வரும் நாடுகள் அதன் செயல்பாடுகள் குறித்தும் பதிவுகள் உருவாக்குதல்.

ஜான் ஸ்வஸ்தியா அபியான் (ஜே.எஸ்.ஏ), இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு (AIPSN/JSA) ஆகியவை அவ்வப்போது முன் வைக்கும் யோசனைகளை கருத்தில் கொண்டு சமூக வலைத்தள குழு செயல்பட வேண்டும்.

அடுத்தக்கட்டமாக மருந்து விற்பனை பிரதிநிதிகள், மக்களுக்கான மருத்துவர்கள் சங்கம், மாணவர்கள் சங்கம், மாதர் சங்கம் போன்ற ஒத்திசைவான அமைப்புக்களோடு எப்படி இணைந்து செயல்படலாம்? அதன் தேவைகள் என்ன என்பது பற்றி அடுத்தக்கட்டமாக அந்த அமைப்புகளோடு பேசிவிட்டு முடிவு செய்வது. இவை அனைத்தையும் தமிழ்நாடு அரசு கருத்திற்கொண்டு, தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details