தேசிய அளவிலான வேலையின்மை பட்டியலில் தமிழ்நாடு
2019-04-12 11:00:12
டெல்லி: தேசிய அளவிலான வேலையின்மை பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.
நாட்டில் இளைஞர்களுக்கு வேலையின்மை அண்மைக்காலமாக அதிகரித்துவருவதாக சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சியினர் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என கடந்த தேர்தலின்போது மோடி அளித்த வாக்குறுதி என்னாயிற்று என கேள்வியெழுப்பி எதிர்க்கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதனை மத்திய அரசு மறுத்துவருகிறது.
இந்நிலையில், 2017-2018ஆம் ஆண்டுக்கான தேசிய மாதிரி ஆய்வு கணக்கெடுப்பில், இந்தியாவில் தமிழ்நாடு ஹரியானா, அஸ்ஸாம், ஜார்கண்ட், கேரளா, ஒடிஷா, உத்தரகாண்ட், பஞ்சாப், பிகார், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்களில் வேலையின்மை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் இந்த கணக்கெடுப்பு வெளியாகியிருப்பது மத்திய அரசுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.