சென்னை: சட்டப்பேரவையில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி பேசுகையில், ‘வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் 2.13 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆளுநர் மாளிகை கட்டப்பட்டுள்ளது. தமிழர் நலன் சார்ந்த 211 கோப்புகள் ஆளுநர் மாளிகையில் தேங்கிக் கிடக்கிறது. அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதற்காகத் தான் ஆளுநரின் செயல்பாடு இருக்க வேண்டும்.
வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆளுநருக்கு மாளிகை எதற்கு? ஆளுநர் மாளிகை என்றால் வனசட்டம் கைகட்டி நிற்குமா? என கேள்வி எழுப்பிய அவர் ஆளுநர் மாளிகை இருக்கும் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆளுநருக்கு அமைச்சர்கள் வசிக்கும் பசுமை வழிச்சாலையில் குடியிருப்பை வழங்க வேண்டும் என முன்மொழிகிறேன். திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் 22 வனத்துறைக்குச் சொந்தமான சாலைகள் இருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் குப்பைகள் நிறையத் தேங்கிக் கிடக்கிறது, இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்கும் பொழுதுக் குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கு இடமில்லை என்கிறார்கள்.