சென்னை: ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எடப்பாடியில் முதலமைச்சரும், போடியில் துணை முதலமைச்சரும் போட்டியிட விருப்ப மனு!
அதிமுக கட்சி சார்பில் சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக எடப்பாடி தொகுதிக்குக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே. பழனிசாமியும், போடி தொகுதிக்குக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.
பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கலை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் பழனிசாமியும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் விருப்பம் தெரிவித்து மனுக்களை அளித்தனர்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி குமாரபாளையத்திலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல்லிலும் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்டனர்.