சென்னை: மகாகவி பாரதியாரின் 140வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகர், கமலாலயத்திலுள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கழக நிர்வாகிகள் ஆகியோர் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், இந்த வருடம் மிகவும் சிறப்பான வருடம், ஏனெனில் இது பாரதியாரின் 100 வது நினைவு ஆண்டாக, 140 வது பிறந்த ஆண்டாக உள்ளது. பாரதி தனது பாடல்கள் மற்றும் கவிதை மூலம் இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் உந்து சக்தியை ஏற்படுத்தியவர் என கூறினார்.
முப்படைகளின் ராணுவ தளபதி பிபின் ராவத் மரணத்திற்கு கவர்னர் செல்லாதது குறித்த கேள்விக்கு, பிபின் ராவத் உடலுக்கு, கவர்னர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது தவறில்லை.
கவர்னர் முன்னதாக ஒப்புக்கொண்ட பட்டமளிப்பு விழா இருந்ததால் செல்லவில்லை எனவும், ஆயினும் அங்கேயே பிபின் ராவத் உள்ளிட்ட வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
நேர்மையாக நடவடிக்கை எடுங்கள்
மேலும், அவர் "தமிழ்நாட்டில் அரசியல் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது ஆளுநரை ஏன் வம்பு சண்டைக்கு இழுக்கிறார் என தெரியவில்லை, முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக வாட்ஸ் அப்பில் தவறாக பேசிய திமுகவை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டவர் குறித்த தகவல் உள்ளது " எனக் கூறினார்.
அத்துடன், டிஜிபி உள்ளிட்ட தமிழ்நாடு காவல்துறையை மாவட்ட திமுக செயலாளர்கள் தங்கள் கைகளில் வைத்திருப்பதாகவும், சைக்கிளில் போவதும் செல்பி எடுப்பதும் டிஜிபி-யின் பணியாக உள்ளது எனவும், திமுக என்னும் கார்ப்பரேட் கம்பெனி தான் தமிழ்நாடு காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றும், காவல்துறை டிஜிபி கையில் இருந்து நழுவி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
நேர்மையான டிஜிபி-ஆக இருந்தால் பிபின் ராவத் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ராணுவ வீரர் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து பேசியவர்கள் குறித்து சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காவல்துறை ஒரு கட்சியை சார்ந்த ஏவல் துறையாகவும், ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது எனத் தமிழ்நாடு காவல்துறை குறித்து விமர்சித்தார். அவர் மேலும், "சிஆர்பிசியின் பவர் இந்தியா முழுவதும் உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் பிபின் ராவத் மரணம் குறித்து தவறான கருத்து வெளியிட்டது தொடர்பாக, இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் உள்ள காவல்துறையும் நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.
தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை
குறிப்பாக, 18 மாநிலத்திலும் நாங்கள் ஆட்சியில் உள்ளோம் என்ற வார்த்தை திரும்ப கூற விரும்பபவில்லை என்றவர், எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம், பொறுமையைக் கலைத்து விடாதீர்கள் என தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கோபாலபுரம் சேவகர்களாக அரசு உயர் அலுவலர்கள் மாற்றப்பட்டு வருவதாகவும், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய அலுவலர்கள் தங்கள் பணியைச் சரியாக செய்வதில்லை என்றும், காவல்துறை அலுவலர்கள் ஒரு தலை பட்சமாக, திமுகவினருக்கு சாதகமாக செயல்படுவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: சேலம் மாவட்டத்திற்கு ரூ.1242 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு