சென்னை: பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாசமாகப் பேசி சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்டதாக பப்ஜி மதனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
மதன் மீது ஆபாசமாகப் பேசுதல் உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது மனைவி கிருத்திகாவும் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துவிட்டார்.
சிறை கைதி பப்ஜி மதன்
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குண்டர் சட்டத்தை அறிவுரை கழகமும் உறுதிசெய்தது. குண்டர் சட்டத்தை எதிர்த்து பப்ஜி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு கடந்த டிசம்பர் மாதம் சிறைக்குள் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வைரலாகும் ஆடியோ
இந்த நிலையில், சிறைக்குள் பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக, அவரது மனைவி கிருத்திகா சிறைக்குள், புழல் சிறையின் விசாரணை கைதிகளின் சிறை பொறுப்பாளர் உதவி ஜெயிலர் செல்வம் என்பவரிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
அந்த ஆடியோவில், நான் கிருத்திகா பேசுறேன். பணம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. சேலத்தில் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. எனக்கு இரண்டு நாள்கள் அவகாசம் வேண்டும் என்று கிருத்திகா பேசினார்.
அதற்குச் செல்வம், இது தொடர்பாக மதன் தெரிவித்தார் என்று கூறினார். "ரூ. 3 லட்சம் அதிகம் என்பதால் காலதாமதம் ஆகிறது. மதனை தனிப்படுத்தப்பட்ட இடத்தில் பார்த்துக் கொள்ளுங்கள். பணம் ரெடியான பிறகு போன் செய்வதாக கிருத்திகா பேசுகிறார். அதற்கு அவர், பிரச்சினை இல்லை. பணம் ரெடி பண்ணி விட்டுச் சொல்லுங்கள்" என்று உதவி ஜெயிலர் செல்வம் பேசிய ஆடியோ வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வைரலாகும் மற்றொரு ஆடியோ
இதைப் போல, மற்றொரு ஆடியோ ஒன்றும் வைரலாகிவருகிறது. அதில் உதவி ஜெயிலர் செல்வத்திடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பேசுகிறார். அதில், "ஆதாரம் இல்லை என நினைக்காதீர்கள். கிருத்திகாவின் வழக்கறிஞருக்குப் போன் செய்தீர்களா? கிருத்திகாவிற்குப் போன் செய்தீர்களா? லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பிவிடவா? டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு அனுப்பிவிடவா? என்னுடைய வேலை முடிந்து போய்விட்டது.
யாரும் இங்குத் தவறு செய்யாமல் இல்லை. நான் கிருத்திகாவுடன் பேசும் ஆடியோவைப் பெரிதாக நினைத்தால் செய்துவிடுவேன். எத்தனையோ விஷயத்தில் சிக்கியுள்ளீர்கள். ஆதாரம் இல்லாததால் தப்பிவிட்டீர்கள்.
ஆனால், இதில் வசமாகச் சிக்கிவிட்டீர்கள். ஆதாரம் வெளியே வந்தால் உங்கள் வாழ்க்கையே முடிந்துவிடும். தேர்தல் நேரத்தில் பலர் வெறிகொண்டிருக்கிறார்கள். நான் உங்கள் நலனுக்காகச் சொல்கிறேன். என்ன பண்ணணுமோ பண்ணிவிடுங்கள்; பேசி முடித்துவிடுங்கள். இல்லையென்றால் நாளை காலை செய்தி அடித்து எங்கே அனுப்பனுமோ அங்கு அனுப்புவேன்.