சென்னை:கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2020 மார்ச் 24ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. 2020-21ஆம் கல்வியாண்டிலும், வகுப்புகளைத் தொடங்க முடியவில்லை. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனிடையே, இந்தாண்டு ஜனவரியில் பொதுத்தேர்வு எழுதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, ஒன்பது, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
கரோனா இரண்டாம் அலை
இந்த வகுப்புகளும் கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக நிறுத்தப்பட்டன. இதனால், 2020-21 கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தி தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டவரப்படாததால், அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் 12ஆம் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே தற்போது கரோனா தொற்றுப் பரவல் குறைந்துவருவதால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பள்ளிகளைத் திறக்க கோரிக்கை வைத்துவந்தனர்.
அதனடிப்படையில், செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள்
இது குறித்து சென்னை, செனாய் நகரில் உள்ள திரு.விக. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளன.
பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மாணவர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி அமரும்படி மேசைகள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது கைகளைச் சுத்தம் செய்ய கிருமிநாசினிகள் அருகில் வைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
பெற்றோர் கலைவாணி கூறுகையில், "ஆன்லைன் வகுப்புகளில் மூலம் கல்வி கற்றாலும், அது மாணவர்களை முழுமையாகச் சென்றடையவில்லை. தற்போது பள்ளிகள் திறப்பதை வரவேற்கிறோம். இருப்பினும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று பார்த்துவிட்டு, பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்" எனக் கூறினார்.
ஆசிரியர் கோபி தெரிவிக்கையில், "பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தவிருப்பது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பள்ளியில், தடுப்பூசி செலுத்திக்கொண்டதிலிருந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் வரை அனைத்தும் சரிவர செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் துணிவாகப் பள்ளிக்கு வரலாம். பெற்றோர்களும் நம்பிக்கையுடன் இருக்கலாம்" என்றார்.
இறுதியாக மாணவன் சிரஞ்சீவி கூறுகையில், "கடந்தாண்டு முழுவதும் பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் படித்துவந்தோம். இதில் முழுமையாக கல்வி கற்க முடியவில்லை. இந்தாண்டு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். தற்போது பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கல்வி கற்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்