இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் 24 கிரவுண்ட் நிலத்தை தி மயிலாப்பூர் கிளப் குத்தகைக்கு எடுத்து அனுபவித்து வருகிறது.
கடந்த 2007 முதல் மாத வாடகை இரண்டரை லட்சம் என நிர்ணயித்து, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ரூ.50 ஆயிரம் கட்டணம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2016ல் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் மாதம் நான்கரை லட்சம் செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன் பேரில் 3 கோடி ரூபாய் அளவிற்கு பாக்கி வைத்திருப்பதாக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், கோயிலின் இணை ஆணையர் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தி மயிலாப்பூர் கிளப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கோயில் நிலத்தை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு விட வேண்டுமெனவும், அதற்கு மேல் நீட்டிக்க உரிய அனுமதி பெற வேண்டுமென அறநிலையத்துறை சட்டத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அதனடிப்படையில் சந்தை மதிப்பின் வாடகை நிர்ணயிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.