சென்னை: கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை 2006ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.
மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.