தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் முன்பாகவே, தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, விவாதத்திற்கு அழைத்து சவால் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”முதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி விவாதத்திற்கு அழைத்திருந்தார். நான் சில நாட்களுக்கு முதலமைச்சருக்கு எழுதிய திறந்த மடலுக்கு இதுவரை பதில் இல்லை. ஆனால், தொடர்ந்து அவர் திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். மறைந்த ஜெயலலிதா மீது நிரூபிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டால் அதற்கு பதில் இல்லை.
முதலமைச்சர் பழனிசாமி மீது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கூறினால், அத்துறையை தன் வசம் வைத்திருக்கும் அவர், புகாரை ஏற்கவே மறுத்து வருகிறார். பாரத் டெண்டரை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது பற்றி கேட்டாலும் பதில் இல்லை. அமைச்சர் வேலுமணி மீது ஆதாரங்களுடன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் பதில் இல்லை. இதற்கெல்லாம் பதில் சொல்ல முதுகெலும்பு இன்றி, எங்கள் மீது குற்றஞ்சாட்டி வருகிறார்.
நீங்கள் முதலமைச்சராக ஆவதற்கு முன்பே நான் மத்திய அமைச்சரானவன். இங்கு யார் பெரியவர் என்பது விஷயமே அல்ல. அதிமுக தரப்பில் நேரம், இடம் ஒதுக்கினால் உங்களுடன் விவாதிக்க நான் தயார். என் தகுதிதான் பிரச்சனை என்றால் உங்கள் கட்சியின் செயலாளர், புயூனிடம் கூட விவாதிக்க தயார். 2ஜி பற்றி ஒன்றுமே தெரியாமல் பேசும் முதலமைச்சர்தான், நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவரின் படத்தை வைத்து வாக்கு கேட்டு வருகிறார்” என்றார்.
இதையும் படிங்க: கூட்டணி! இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு அதிகாரம்