சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி மக்கள் நலச்சங்கம் சார்பில், சென்னை மாநகராட்சி 176ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் 80 பேருக்கு வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள உயர்தர சைவ உணவகத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்தனர். அவர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர்.
தூய்மைப்பணியாளர்களுக்கு உயர்தர உணவகத்தில் உணவளித்து மகிழ்ந்த குடியிருப்புநலச்சங்கத்தினர்
தூய்மைப் பணியாளர்களை உயர்தர உணவகத்தில் அமர வைத்து உணவளித்து மகிழ்ந்த நலச்சங்க நிர்வாகிகளின் செயல் பலரிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் கெளரவிக்கும் வகையில் அவர்களையும் சக மனிதர்களாக மதிப்பளிக்க வேண்டும் என்பதால், உயர்தர சைவ உணவகத்தில் தூய்மைப்பணியாளர் சீருடையோடு உணவு உண்ண வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 80 பேருக்கு குடியிருப்பு நலச்சங்கத்தினர், தங்கள் கைகளால் உணவு பரிமாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2ஆவது ஆண்டாக, இதனை முன்னெடுத்த நலச்சங்க நிர்வாகி கீதா கூறுகையில், 'அனைத்து நாட்களிலும் தூய்மைப்பணியாளர்கள் நமக்கு சேவை செய்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் பறிமாறி உணவளிக்க முடிவு செய்து அனுமதி பெற்று மதிய உணவு வழங்கினோம். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதனை செய்ய உள்ளோம். தூய்மைப் பணியாளர்களை குப்பைக்காரர்கள் என வெறுத்து ஒதுக்கும் மக்கள் மத்தியில் அவர்களுக்கான மரியாதையை மெய்ப்பிக்கவும், மரியாதை கொடுக்கும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யட்டது’ எனக் கூறினார்.
இதுகுறித்து பேசிய தூய்மைப்பணியாளர்கள், 'தெருக்களில் இருக்கும் குப்பைகளை தூய்மை செய்யும் தங்களை வாசலோடு அனைவரும் அனுப்பி விடுவார்கள்; ஆனால், எங்களையும் அழைத்து உயர்தர உணவகத்தில் சரிசமமாக அமரவைத்து அறுசுவை உணவு வழங்கியதற்கு நன்றி’ என தெரிவித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுக விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்?