தமிழ்நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் இயற்றக்கோரி ஜனவரி 17 முதல் 23 வரை நடந்த பல்வேறு போராட்டங்களில் ஆங்காங்கே வன்முறைச் சம்வங்கள் நடைபெற்றன. இந்நிலையில் சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஜனவரி 23ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது.
அதேபோல, மதுரை அலங்காநல்லூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து, இந்த வன்முறைச் சம்பவத்திற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் குழு செயலாளர் மோகன் உள்பட ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணையில், ஆயிரத்து 951 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு விரிவான அறிக்கை தயார்செய்யப்பட்டது. அந்த இறுதி அறிக்கையை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் வழங்கினார்.