சென்னை: தமிழ்நாட்டில் சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் நிலை என்ன என்பது குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்ததது. அப்போது, தமிழ்நாடு உள்துறை செயலர் தரப்பில், 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக 10 ஆயிரத்து 926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலர் தரப்பில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பேனர்கள் வைப்பதற்கு உரிமம் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள், பேரூராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக இயக்குநர், டிஜிபி ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக 2021ஆம் அக்டோபர் முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை அகற்றுவதற்கான செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும் எனத் தெரிவித்து, பிப்ரவரி 18ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:நீட் மசோதாவை சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர்