அரவக்குறிச்சியில் அண்ணாமலை தோல்வி
கரூர் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், முன்னாள் ஐபிஎஸ் அலுவலருமான அண்ணாமலை 24 ஆயிரத்து 816 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். பாஜக சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை 68,553 வாக்குகள், அதாவது பதிவான வாக்குகளில் 38.71 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை, வாழ்க்கையில் பல தோல்விகளைக் கண்டுள்ளதாகவும், அதில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார்.
பாஜக துணை தலைவர் அண்ணாமலை சமூகவலைதளத்தில் தன் மீது வைக்கப்படும் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாஜக தமிழ்நாட்டில் மிகப் பெரிய வளர்ச்சி அடையும் என்று தெரிவித்தார். அடுத்து வரும் தேர்தல்களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் பாஜகவின் செயல்பாடு என்பதைத் தாண்டி அண்ணாமலையின் வெற்றிக்காக பாஜக நீண்ட நாட்களாக திட்டமிட்டு செயல்பட்டது என்கிறார்கள் விமர்சகர்கள். எனினும் அண்ணாமலையால் வெற்றிபெற முடியவில்லை.
சந்தோஷ் பாபு தோல்வி
அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்ட சந்தோஷ் பாபுவால் வெறும் 23 ஆயிரத்து 72 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக இருந்தவர், பாரத் நெட் உள்ளிட்ட பல தொழில்நுட்ப முன்னோடித் திட்டங்களுக்கு பின்னால் இருந்தவர் என்ற நற்பெயர் இருந்தாலும், அது தேர்தலில் பிரதிபலிக்கவில்லை. பதிவான வாக்குகளில் 13.06 சதவிகித வாக்குகளை மட்டுமே அவர் பெற்றுள்ளார்.
வேளச்சேரி மநீீம வேட்பாளர் சந்தோஷ்பாபு காங்கிரஸ் கட்சி வேளச்சேரியில் சரிவர களப்பணி ஆற்றவில்லை என்ற புகாரும் உள்ளது. அதேபோல்,2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நகர்புறப் பகுதிகளில், குறிப்பாக சென்னையில் ஆதரவு இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறினர். ஆனால், இவையெல்லாம் சந்தோஷ் பாபுவுக்கு கைகொடுக்கவில்லை.
வேளச்சேரியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னையான மழை நீர் வடிகால் ஒன்றிணைந்த திட்டம், பட்டா வழங்க நடவடிக்கை, நவீன நகர்புற வளர்ச்சிக்கான திட்டம் என பல்வேறு திட்டங்களை அவர் முன்வைத்தாலும், சாதாரண மக்களிடம் தனது கருத்துக்களை முன்னெடுத்து செல்ல முடியாததும், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க முடியாததும் அவருடைய பின்னடைவுக்கான காரணங்கள் என கூறலாம். எனினும், தேர்தலில் தோல்வியுற்றாலும் வேளச்சேரியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்கிறார் சந்தோஷ் பாபு.
இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட ரங்கராஜனும் தோல்வியடைந்துள்ளார். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று திமுக சார்பில் போட்டியிட்ட சிவகாமியும் தோல்வியையே தழுவினார். கடந்த கால தமிழ்நாட்டு தேர்தல்களில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் சோபித்ததில்லை என்பதே வரலாறாக இருக்கிறது.
தீர்வுகள் மட்டுமே தீர்வாகாது
இது தொடர்பாக பேசிய அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதன், "அரசியல் என்பது வெறும் நிர்வாகம் அல்ல. அரசியலுக்கு வரும் அலுவலர்களிடம் நிர்வாக திறன் இருக்கும், நிர்வாகத்தில் இருக்கும் பிரச்னைகளைப் பற்றி அவர்கள் பேசுவார்கள். அதிகார அனுபவத்தின் அடிப்படையில் ஊழலற்ற நிர்வாகத்தை தர முடியும் என கூறி அரசியலுக்குள் வருகிறார்கள்.
அரசியலின் இலக்குகளில் ஒன்று தான் நிர்வாகம். இது தவிர பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. அரசு அலுவர்கள் இது பற்றியெல்லாமல் பேசினாலும் அதற்கு நிர்வாக தீர்வையே முன்வைப்பார்கள்.
தேர்தலில் அதிக எண்ணிக்கையில் தோல்வியடையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் அதனால்தான் ஊழலையே பிரதான பிரச்னையாக பார்க்கிறார்கள். ஜாதி, பொருளாதார, கல்வி தொடர்பாக சிக்கல்கள், நகரங்களுக்கும் கிராமங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் பற்றி அவர்கள் பேசுவதில்லை. இதனாலேயே அலுவலர்கள் அரசியலில் வெற்றி பெற வாய்ப்பு குறைவு. இதுபோன்றவர்கள் பெரிய கட்சியின் பிரதிநிதியாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.
ஆனால் தனியாக தேர்தலை சந்தித்தால் வெற்றிவாய்ப்பு மிகக் குறைவு. அதேபோல், அலுவலர்கள் ஒரு தேர்தலில் தோல்வி அடைந்தால் அடுத்த முறை போட்டியிட மாட்டார்கள். அரசியலில் வளர பல ஆண்டுகாலம் உழைக்க வேண்டும், அதற்குரிய பொறுமை அவர்களுக்கு இல்லை" என்றார்.
இதையும் படிங்க: திணறடித்த ராமு; புலம்பிய துரை...!