சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் போலியோ முதல் தவணை சொட்டு மருந்து முகாமை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 57 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போலியோ சொட்டு மருத்து தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்படும். பெற்றோர்கள் ஐந்து வயதுக்குட்பட்ட தங்களது குழந்தைகளை அருகிலிருக்கும் முகாம்களுக்கு அழைத்து வந்து கட்டாயம் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகாம்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள்
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கை கழுவதல் , தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது / சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மையங்களில் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும், சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் சுகாதாரத் துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் கூட மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய, சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட வேண்டும்.