சென்னை: பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி இவர் நேற்று (நவம்பர் 21) வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்று திரும்பும்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கலைச்செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தங்கத் தாலி சங்கிலியைப் பறித்துக்கொண்டு பறந்துவிட்டார்.
இது தொடர்பாக அந்தப் பெண் ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மின்னல் வேகத்தில் பறந்த திருடன் - சுற்றிவளைத்த காவலர்கள்
இந்நிலையில், நேற்று இரவு சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சத்யபிரியா என்பவர் முகப்பேரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பியுள்ளார். அப்போது, பைக்கில் வந்த அதே இளைஞர் சத்யபிரியா கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளார்.
தொடர்ந்து சத்யபிரியா விடாமல் போராடி ’திருடன் திருடன்’ என்று சத்தம் போடவே, அங்கிருந்த பொதுமக்கள் வருவதை அறிந்து அந்த நபர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார். இது தொடர்பாக சத்யபிரியா ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பிறகு காவல் துறையினர், அங்கிருந்த 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து, வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நெற்குன்றம் பகுதியில் ஒரு இளைஞர் கத்தியுடன் சுற்றிவருவதாக ஜெஜெ நகர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குற்றவாளியைச் சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.
கத்தியுடன் சுற்றிய இளைஞர்
காவல் துறையினர் விசாரணையில் திருவேற்காடு அன்பு நகர்ப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற மிட்டாய் கார்த்திக் (24) என்பது தெரியவந்தது. இவர் இதற்கு முன்பு அண்ணாநகர், திருமங்கலம், நோலம்பூர், திருமுல்லைவாயில், வளசரவாக்கம், கோடம்பாக்கம், கொடுங்கையூர், திருவேற்காடு எனப் பல பகுதிகளில் பெண்களின் தாலி சங்கிலியைப் பறித்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்தார்.
தொடர் விசாரணையில், இதேபோன்று ஆவடியில் ஒரு பெண்ணின் தாலி சங்கிலி பறித்த வழக்கில், சிறைக்குச் சென்று இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியே வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், கொள்ளையடித்த ஏழு சவரன் நகைகளைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போட உள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னை மசாஜ், ஸ்பா மையங்களில் பாலியல் தொல்லை? அதிரடி சோதனையில் சிலர் கைது