சென்னை: சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய 5 விமான நிலையங்கள் நாட்டின் முக்கியமான சர்வதேச விமான நிலையங்களாக உள்ளன. அதன் காரணமாக பல்வேறு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் சஞ்சீவ்குமார் தலைமை தாங்கினார். மாநில அரசின் தொழில் முதலீட்டு கழகமான டிட்கோ மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.