கடந்த செப்டம்பர் 25ஆம் தேதியன்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன், நீட் தேர்வின் மூலம் சேர்ந்த அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனடிப்படையில் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் இரு மாணவர்களின் நீட் தேர்விற்கான ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படமும் மாணவர் சேர்க்கைக் குழுவின் அனுமதி கடிதத்தில் உள்ள புகைப்படமும் வேறுபட்டுள்ளதாகத் தெரியவந்தது. இது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுவிற்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களின் ஆவணங்களை சரிபார்த்து உறுதி செய்த பின்னரே அந்த மாணவர்கள் படிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் நேற்று தெரிவித்திருந்தார்.