சென்னை சூளைமேட்டை சேர்ந்த முத்துராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "சென்னையில் சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
அதோபோல சில மண்டலங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வார்டு ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து, வார்டுகளில் உள்ள பெண்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அதுவரை மாநகராட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், சென்னை மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 66 லட்சத்து 72 ஆயிரத்து 103. இவற்றில் 70 விழுக்காடு மக்கள் அதாவது 46 லட்சத்து 46 ஆயிரத்து 732 பேர் சென்னையின் மையப்பகுதியில் வசிக்கின்றனர்.
மீதமுள்ள 20 லட்சத்து 25 ஆயிரத்து 371 பேர் மாற்ற பகுதிகளில் வசிக்கின்றனர். மக்கள்தொகை அடிப்படையில், வார்டுகளை பிரித்தால் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை சமமான அளவில் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி தரப்பில், அரசியல் சாசன அடிப்படையில் வார்டு மறுவரையறைக்கு எதிராக யாரும் வழக்கு தொடர முடியாது. தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட வார்டு மறுவரையறையின் அடிப்படையில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்தையும் கேட்ட நீதிபதிகள், தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு (பிப்ரவரி 07) ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு