தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் கட்டாயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமைக்ரான் வேகமாகப் பரவி வருவதால், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும்; அப்படி அணியவில்லையென்றால் கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Minister Ma Subramanian
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : Jan 2, 2022, 6:28 PM IST

சென்னை: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.

அதன்பின்னர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, "உலகம் முழுவதும் டெல்டா, ஒமைக்ரான் இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

எனவே, மாநில அளவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அமைச்சருடன் காணொலி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தோம்.

இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அது அனைத்தும் ஐந்து நாட்களில் அமல்படுத்தப்படும்.

பூஜ்ஜியம் நோக்கி தொற்று நகர்ந்து வந்த நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இன்னும் அதிகமாகும் என அச்சம் உள்ளது.

தன்னார்வுப் பணியாளர்கள் நியமனம்

சென்னை, செங்கல்பட்டில் தொற்று அதிகமாகி வரும் நிலையில் இன்று (ஜன.2) ஆலோசனை நடத்தியுள்ளோம்.

மாநகராட்சியில் இன்றே 1,000 கரோனா தன்னார்வுப்பணியாளர்கள் நியமனம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. ஒரு வார்டில் 5 பேர் என 200 வார்டுகளுக்கும் நியமனம் செய்யப்படுவார்கள்.

அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலத்திற்குச் சென்று யாருக்குத் தொற்று உள்ளது என்பதை பார்ப்பதோடு, அவர்கள் வெளியே வருவதைத் தவிர்க்கும் வண்ணம் அவர்களின் தேவைகளையே நிவர்த்தி செய்வார்கள்.

மேலும் 15 மண்டலங்களில் டெலி கவுன்சிலிங் (Tele Counseling) மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் மருத்துவர்கள் குழுவாக அமர்ந்து ஆலோசனை வழங்குவார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் கரோனா சிறப்பு கவனிப்பு மையம் அமைக்கப்படும். கடந்த மே, ஜூன் மாதம் எங்கு எல்லாம் கரோனா சிறப்பு மையம் இருந்ததோ அங்கெல்லாம் இம்மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முகக்கவசம் கட்டாயம்

ஒமைக்ரான் வேகமாகப் பரவுவதால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அப்படி அணியவில்லை என்றால் கண்டிப்பாக அபராதம் வசூலிக்கப்படும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடந்த கரோனா அலையில் மாநகராட்சி சார்பில் கார் ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட்டதுபோல், இப்பொழுது உடனடியாக 20 கார் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரிப்பன் மாளிகையில் கரோனா (COVID) கண்ட்ரோல் ரூம் மீண்டும் உருவாக்கப்பட உள்ளது. அதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி

கரோனா தடுப்பூசி செலுத்த ஆன்லைன் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாமே மக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறோம்.

ஒரே நாளில் 7,000 மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்தியுள்ளோம். தொடர்ச்சியாக அதை நடத்தி வருகிறோம்.

ஒமைக்ரான், டெல்டா என எந்த வகை கரோனாவாக இருந்தாலும் ஒரே மாதிரியான சிகிச்சை தான் அளித்து வருகிறோம். ஒரு மாதத்திற்குள் 15 - 18 வயது சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒமைக்ரான் பரவல்.. மத்திய அமைச்சருடன் மா. சுப்பிரமணியன் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details