தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 4, 2022, 8:54 PM IST

ETV Bharat / city

சென்னையில் 15 இடங்களில் பரிசோதனை மையம்: ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை

கரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவருவதால் முன்னெச்சரிக்கையாக சென்னையில் 15 இடங்களில் பரிசோதனை மையம், தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

ஓமைக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை-சென்னையில் 15 இடங்களில் பரிசோதனை மையம்
ஓமைக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை-சென்னையில் 15 இடங்களில் பரிசோதனை மையம்

சென்னை: தலைநகர் சென்னையில் கரோனா பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இதில் முதற்கட்டமாகச் சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் அமைந்துள்ள பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் கரோனாவிற்குப் பிந்தைய முதற்கட்ட முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் நேரில் ஆய்வுசெய்தனர்.

15 இடங்களில் பரிசோதனை மையம்

அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சேகர்பாபு கூறியதாவது, "கரோனா, ஒமைக்ரான் நோய்த்தொற்றைத் தடுக்கும்வகையில் தமிழ்நாட்டிலேயே சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனாவிற்குப் பிந்தைய முதல்கட்ட உடல் பரிசோதனை மையம் அமைக்கும் பணிகளைச் சென்னை மாநகராட்சி செய்துவருகிறது.

அமைச்சர் சேகர்பாபு

மேலும் தற்போது ராயபுரம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் தொலைபேசி ஆலோசனை மையங்கள் செயல்பட்டுவருகின்றன. விரைவில் 15 மண்டலங்களிலும் பொதுமக்களுக்காக தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கும் பணிகளைச் சென்னை மாநகராட்சி செய்துவருகிறது.

சென்னையில் ஒவ்வொரு வட்டத்திற்கும் ஐந்து பேர் வீதம் சுமார் ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் வீட்டிற்கே சென்று பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும் ஜனவரி 1ஆம் தேதி கரோனா நோய்ப் பரவல் இருந்தபோதும் மக்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தது.

வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடு

அதேபோல் கரோனா, ஒமைக்ரான் பரவலைப் பொறுத்தும், அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையிலும் வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் கலந்து பேசி முதலமைச்சர் முடிவெடுப்பார்.

முதன்முதலில் கரோனா பரவல் இருந்தபோது வடசென்னையில் இருப்பவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர், அதனால் அவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி இருக்கும் என இதுபோன்ற பல கருத்துகள் இருந்துவந்தன.

ஆனால் அனைத்து இடங்களிலும் கரோனா பரவல் இருந்துவந்தது. எனவே அடுத்து நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி அதிகளவில் போடப்படாத பகுதிகளைக் கண்டறிந்து அந்தப் பகுதியில் அதிகளவில் தடுப்பூசிகள் போட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னையில் தொற்றுப் பரவலை மண்டலம், வார்டு வாரியாகக் கணக்கிட்டு அதிக தொற்று பாதித்த பகுதிகளில் விரைவில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உயர்மின் கோபுரத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் 200% இழப்பீடு கோருவதா? - செந்தில்பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details