வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரின் வேட்பு மனுவைத் தேர்தல் அலுவலர் திவ்யதர்ஷினியிடம் மோகன்ராஜ் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தேர்தல் அலுவலர் திவ்யதர்ஷினி, வேட்பாளர்கள் முன்னிலையில் மனுக்களை பரிசீலனை செய்தார். அப்போது, தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மனு ஏற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தேமுதிக வேட்பாளராக வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தேர்தல் அலுவலர் ஏற்றுக் கொண்டதாக தெரிவத்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்கு மனுக்கள் அளித்திருந்ததாகவும், ஒரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மூன்று மனுக்கள் தேர்தல் அலுவலரால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வடசென்னை மக்களவைத் தொகுதியில் முதலமைச்சர் 10 இடங்களில் பரப்புரை செய்ய உள்ளதால், கட்சித் தொண்டர்கள் உத்வேகத்துடன் பொதுமக்களை சந்தித்து தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம் எனவும் தெரிவித்தார்.