நோபல் பரிசு
உலக வறுமையை ஒழிக்க புதுமையான முறைகளை கையாண்டதற்காக இந்திய அமெரிக்கரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரெம்மர் ஆகிய மூவருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அபிஜித் பானர்ஜி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர். அமெரிக்கா- ஃபிரான்ஸ் பொருளாதார பேராசிரியையான எஸ்தர் டஃப்லோ, இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண்ணும் இவரே. இவருக்கும் தமிழ்நாட்டிற்கும் 2013ஆம் ஆண்டு முதலே தொடர்பு இருந்துள்ளது.
எஸ்தரும் தமிழ்நாடும்
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் எஸ்தர், வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாட்டு பொருளாதாரம் (டெவலப்மென்ட் எகனாமிக்ஸ்) குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகிறார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க, தமிழ்நாடு அரசு அப்துல் லத்தீஃப் ஜமீல்- பாவர்ட்டி ஆக்ஷன் லேப் (J- PAL) என்னும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. 2014 நவம்பர் மாதம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அப்போதைய முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், ஜே- பால் அமைப்பின் பிரிதிநிதிகளுடன் எஸ்தர் டஃப்லோவும் கலந்துகொண்டார்.
அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டத்தில் அபிஜித் பானர்ஜி மனைவி எஸ்தர் டூஃப்ளோ கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம். பாராட்டு
அப்போது அவர் தமிழ்நாடு அரசின் செயலை வியந்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பேசுகையில், "வறுமையை ஒழிக்க புதுமையான முறைகளைக் கண்டுபிடிக்க தனது அலுவலர்களையும் பிறரையும் சவால் நிறைந்த பணிகளை செய்ய நிர்ப்பந்திக்கும் தமிழ்நாடு அரசின் முனைப்பு தங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்னைகளுக்குப் புதுமையான முயற்சிகளைக் கண்டறியும் அரசின் பாரம்பரியத்தின் நீட்சியே இது" என்று பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஆய்வு
தமிழ்நாட்டில் உள்ள மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதார நிலை ஆகியவை குறித்து எஸ்தர் டஃப்லோ அபிஜித் பானர்ஜி தம்பதி விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் தாயார் பேட்டி