தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 29, 2021, 7:28 PM IST

ETV Bharat / city

‘உதவிப் போராசிரியர் பணி நியமன ஆணையைத் திரும்பப் பெற வேண்டும்’ - சீமான் வலியுறுத்தல்

சென்னை: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்னும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Government of Tamil Nadu should immediately withdraw the order that only those with doctoral degree can apply for post of Assistant Professor Says Seeman
Government of Tamil Nadu should immediately withdraw the order that only those with doctoral degree can apply for post of Assistant Professor Says Seeman

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இதுவரை மாநிலத் தேர்வாணையம் நடத்தும் மாநிலத் தகுதித் தேர்வு (State Eligibility Test -SET), தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test - NET) ஆகியவற்றில் தேர்ச்சியடைந்த முதுகலைப் பட்டதாரிகள் மூலம் நிரப்பப்பட்டுவந்தன. இவை தவிர, முனைவர் பட்டம் பெற்றவர்கள் நேரடியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாநில, தேசிய தகுதித் தேர்வுகள் (SET & NET) நடத்தப்படாத சூழலில், மத்திய அரசின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு (University Grants Commission - UGC) உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு முனைவர் பட்டம் பெற்றிருப்பது கட்டாயம் என்ற பரிந்துரையை அளித்தது.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாகவே உள்ளனர். அவர்கள் பல்வேறு சமூக, பொருளாதாரத் தடைகளைத் தாண்டியே உயர்கல்வி படித்துப் பட்டம் பெறும் சூழ்நிலை நிலவுகிறது. மேலும், முனைவர் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்கவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் மிக அதிகமான பொருட்செலவும், கால அளவும் தேவைப்படும் தற்காலச்சூழலில், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் முனைவர் பட்டம் பெறுவதென்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

அந்தப் பரிந்துரையை அப்படியே ஏற்று அதன் சாதகப் பாதகங்கள் குறித்து ஆராயாது, கிராமப்புறப் பட்டதாரிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாது தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலாகும்.

சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எதிராகச் செயல்படும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் சூழ்ச்சிக்குத் துணைபோகும் வகையில் முனைவர் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்னும் முடிவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...ஜெ வீட்டு சாவி: உத்தரவுக்கு இடைக்காலத் தடை

ABOUT THE AUTHOR

...view details