சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின்போது கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக உறுப்பினர் பிச்சாண்டி, ’தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 460 இடங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் இந்த ஆண்டு கல்லூரியில் சேர்வதற்காக 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு இல்லாததால் அதிக மாணவர்கள் சேர விண்ணப்பிக்கின்றனர்.
எனவே தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படுமா? என கேள்வியெழுப்பினார்.
மேலும், தமிழ்நாட்டிலேயே பால் உற்பத்தியில் இரண்டாவது மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு திருவண்ணாமலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ”தமிழ்நாட்டில் நான்கு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. எனவே இது குறித்து முதலமைச்சரிடம் கூறி தேவையான இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். மேலும் திருவண்ணாமலையில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ”என்று பதிலளித்தார்.