சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதற்கான காலத்தை நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதலாம் வகுப்பில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீத இடங்கள், ஏழை,எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
அதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதுமுள்ள 8 ஆயிரத்து 628 தனியார் பள்ளிகளில் 1,15,771 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக இணையதளம் மூலம் 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு குறைவாக உள்ள பள்ளிகளில் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கூடுதலாக விண்ணப்பித்து இருந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை ஏழாம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்கள் விவரத்தைத் தகவல் பலகையில் தனியார் பள்ளிகள் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிட வேண்டும்.
அக்டோபர் 12 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான மாணவர்களின் பட்டியலை நவம்பர் 11 ஆம் தேதியும், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை 12 ஆம் தேதியும் பள்ளிக் கல்வித்துறை இணையதளம் மற்றும் பள்ளியின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.