தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாமக மீது பழி சுமத்தியவர்கள் மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேட்கட்டும் - ராமதாஸ்

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது ஒன்று தான். மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். அரசியல் லாபத்திற்காக மனசாட்சியை விற்று விடாதீர்கள் என்பது தான். வட தமிழ்நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும், அவற்றின் வாயிலாக வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், பெரும்பான்மையாக வாழும் சமுதாயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்.

Arakkonam murders:  Apologize Need PMK Ramadoss!
Arakkonam murders: Apologize Need PMK Ramadoss!

By

Published : Apr 14, 2021, 1:20 PM IST

சென்னை: அரக்கோணம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக தங்கள் கட்சி மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது என தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தையடுத்த சோகனூர் பகுதியில் நடைபெற்ற மோதலில் இருவர் கொல்லப்பட்ட நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி ப.சிவகாமி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அறிவித்திருக்கிறது. உண்மைகளை புதைப்பதால் மறைத்து விட முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில், உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அரக்கோணம் நிகழ்வில் கொல்லப்பட்ட இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை; அவர்கள் பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்கவும் இல்லை; இந்தக் கொடிய படுகொலைகளின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழு கூறியிருக்கிறது. இதையே தான் பாட்டாளி மக்கள் கட்சியும் தொடக்கத்திலிருந்தே கூறி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை நிரூபித்துள்ளது.

உண்மை கண்டறியும் குழுவின் தலைவர் ப.சிவகாமி பா.ம.க.வுக்கு ஆதரவானவர் அல்ல. பா.ம.க. மீது பல்வேறு தருணங்களில் தெரிந்தே அவதூறுகளை பரப்பியவர்களில் அவரும் ஒருவர். ஆனாலும், அரக்கோணம் படுகொலைகள் தொடர்பான விசாரணையில் அறத்தின் பக்கம் நின்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ப.சிவகாமியின் முயற்சி வரவேற்கத்தக்கது; இது பாராட்டப்பட வேண்டியதாகும்.

அரக்கோணம் படுகொலையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எவருக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தான் தொடக்கம் முதலே நான் கூறி வந்தேன். ஆனால், பா.ம.க.வுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத இப்படுகொலைகளில் பா.ம.கவை சம்பந்தப்படுத்தி சில கட்சிகள் அவதூறு பரப்பின. தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்பதில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு அக்கறை இருந்திருந்தால், இந்த அவதூறு பரப்புரையை கண்டித்து இருந்திருக்க வேண்டும்; வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வ பணிகளை செய்திருக்க வேண்டும். ஆனால், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அதை செய்யவில்லை. மாறாக, பா.ம.க. மீதான அவதூறு பரப்புரைக்கு துணை போயின.

அரக்கோணம் படுகொலையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என உண்மை கண்டறியும் குழு கூறி விட்ட நிலையில், பா.ம.க. மீது அவதூறு பழிகளை சுமத்தியவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அரக்கோணம் படுகொலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் காரணம்; பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பானை சின்னத்திற்கு வாக்களித்ததால் ஆத்திரமடைந்து தான் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டது; தோல்வி பயத்தால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை பா.ம.க.வினர் படுகொலை செய்தார்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. வன்னியர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பகைமையை உண்டாக்கி மிகப்பெரிய சாதி மோதலை ஏற்படுத்த வேண்டும்; அதில் அரசியல் குளிர் காய்ந்து சுகம் காண வேண்டும் என்ற நோக்கத்துடன் விஷம் தோய்த்து ஏவப்பட்ட அம்புகள் தான் பாட்டாளி மக்கள் கட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறுகள்.

உண்மையை ஆராயாமல் இந்த அவதூறு குற்றச்சாட்டுகளை ஆதரித்து அறிக்கைகளை வெளியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் அவரது கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர்களும் தமிழகத்தில் சாதிக் கலவரத்தை ஏற்படுத்தும் சதிக்கு துணை நின்றவர்கள் தான். இதை அவர்களால் மறுக்க முடியாது. உத்தமர் வேடமிடும் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது கூட்டாளி தலைவர்களுக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அது அவர்களை உறுத்தும்; தாங்கள் செய்த தவறுக்காக பா.ம.க.விடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பார்கள். அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? அல்லது மனம் முழுவதும் வஞ்சகமும், சதியும் தான் நிறைந்திருக்கிறதா? என்பதைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது ஒன்று தான். மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். அரசியல் லாபத்திற்காக மனசாட்சியை விற்று விடாதீர்கள் என்பது தான். வட தமிழ்நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும், அவற்றின் வாயிலாக வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், பெரும்பான்மையாக வாழும் சமுதாயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். அதற்கு தடையாக இருக்கும் சக்திகளை விரட்டி அடியுங்கள். அது தான் அறம். மாறாக, பிளவை ஏற்படுத்தி அதில் பிழைப்பு நடத்தும் சக்திகளையே ஆயுதமாக ஏந்தி, அந்த ஆயுதத்தை அப்பாவி வன்னியர்கள் மீது ஏவுவீர்கள் என்றால் நீங்கள் நடத்துவது அரசியல் அல்ல... அழித்தொழிப்பு. உங்களின் நாடகம் இப்போது அம்பலமாகிவிட்ட நிலையில், இதை வைத்து இனியும் பிழைப்பு நடத்த முடியாது. பாதிக்கப்பட்ட மக்கள் உங்களை விரட்டியடிக்கப் போவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details