தமிழ்நாடு

tamil nadu

ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு

By

Published : Dec 16, 2019, 7:23 PM IST

சென்னை: நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை பரிந்துரையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

high court
high court

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அமைச்சரவை பரிந்துரை அளித்த பிறகும் கடந்த 15 மாதங்களாக அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல், அரசியல் சாசன விதிகளை மீறி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டுள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ”பாஜக உறுப்பினராகவும் ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாகவும் இருந்த ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை எதிர்க்கும் தமிழ்நாடு மக்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், 15 மாதங்களாக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துரைசாமி, அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது, அரசியல் சாசன அதிகாரங்களுக்கு முரணானது என வாதிட்டார்.

அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுக்க எந்தக் கால நிர்ணயமும் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை பதவி நீக்கம் செய்யும்படி, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு எப்படி உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details