இது குறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழுச் செயலாளர் செல்வராஜன் கூறியதாவது:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.
அந்தக் கலந்தாய்வில் இடங்களைத் தேர்வுசெய்த மாணவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவர்களும், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் மூன்று மாணவர்களும், சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 16 மாணவர்களும் சேராமல் உள்ளனர்.
அதேபோல் பிடிஎஸ் படிப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இரண்டு மாணவர்களும், ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் 10 மாணவர்களும் சேராமல் உள்ளனர். தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 20 மாணவர்கள் கலந்தாய்வில் இடங்களைத் தேர்வுசெய்யவில்லை. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்களில் 112 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.
தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் 457 இடங்கள் காலியாக இருக்கின்றன. தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் இடங்களைத் தேர்வுசெய்து சேராத மாணவர்களின் விவரங்களையும் கேட்டுள்ளோம். அந்த இடங்களுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படும்.
அரசு மருத்துவக்கல்லூரி, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, சுயநிதி மருத்துவக்கல்லூரியில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் படிப்பிற்கு ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் மறு ஒதுக்கீட்டுக் கலந்தாய்வும், கலந்தாய்வும் நடத்தப்படும்.
இந்தக் கலந்தாய்வில் ஏற்கனவே சேர்ந்துள்ள கல்லூரியில் மாணவர்கள் தொடர விரும்பினால் கலந்துகொள்ளத் தேவையில்லை. அதேபோல் பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கல்லூரியைத் தேர்வுசெய்த மாணவர்களும், காத்திருப்புப் பட்டியலில் உள்ள மாணவர்களும், புதிதாக விண்ணப்பம் செய்த மாணவர்களும் ஜனவரி 30ஆம் தேதி கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in , www.tnmedicalselection.org என இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:எம்.பி.பி.எஸ் பி.டிஎஸ் படிப்பில் அரசுப்பள்ளியில் படித்த 395 மாணவர்களுக்கு வாய்ப்புc