paddy fields cultivation: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜனவரி 8) மு.க. ஸ்டாலின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டத்தின்கீழ், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தார்.
நெல் தரிசில், உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்கள் 11 லட்சம் ஏக்கரில் பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. பயறுவகைப் பயிர்களை பயிரிடுவதற்குத் தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், சுழற்கலப்பை, விசைத்தெளிப்பான்கள், வயலுக்கு நீர் கொண்டுசெல்லும் குழாய்கள், தார்ப்பாய்கள் ஆகியன மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
மேலும், உற்பத்திசெய்யப்பட்ட பயறு வகைப் பயிர்களை விலை ஆதரவுத் திட்டத்தின்கீழ், வேளாண் விற்பனை - வணிகத் துறையின்கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.