தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1,400 கி.மீ. நீளத்திற்குச் சாலைப்பணிகள் குறித்து ஆய்வு நடத்திய அமைச்சர்!

சென்னை: 1400 கி.மீ. நீளத்திற்குச் சாலைப் பணிகள் தேர்வுசெய்து மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆய்வுசெய்தார்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

By

Published : Feb 11, 2021, 1:24 PM IST

ஊரக வளர்ச்சி, பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சிகளின் சாலை சீரமைப்பு குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வுமேற்கொண்டு, நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் உத்தரவிட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், 2020-21 TURIP சாலைப் பணிகள், குளங்கள் பராமரிப்புப் பணிகள், புதிதாக எடுக்கப்படும் சாலைப் பணிகள் குறித்தும், சிறப்புச் சாலைகள் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, ஒப்பந்தப்புள்ளி கோர விரைவில் நடவடிக்கை எடுத்திடவும், திடக்கழிவு மேலாண்மை பணிகளில் தனியாருக்கு ஒப்படைத்தப் பின் ஏற்கனவே உள்ள பணியாளர்கள் 100% பேரையும் வேலையிழப்பு இல்லாமல் அனைவரையும் தனியார் அமைப்பில் ஈர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் PMGSY III ( 20-21 ) முதற்கட்ட திட்டத்தில் ரூ.1,265 கோடி மதிப்பீட்டிலான சாலைப் பணிகள் மற்றும் PMGSY III ( 20-21 ) 2ஆம் கட்டாக 1400 கி.மீ. நீளத்திற்கு சாலைப் பணிகள் தேர்வுசெய்து மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல்பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், 14ஆவது மத்திய நிதி குழு மானிய திட்டப் பணிகளின் நிலை குறித்தும், ஊரகப் பகுதிகளில் ரூ.250 கோடி மதிப்பீட்டிலான அடிப்படை வசதிகள் திட்டத்திற்கான பணிகளை விரைந்து தொடங்கிடவும், 2020-21ஆம் ஆண்டின் TNRRIS திட்டத்தில் மீதமுள்ள பணிகளுக்கு அரசாணை பெறப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோருதல் குறித்தும், ரூ.118 கோடி மதிப்பீட்டிலான நபார்டு திட்டத்தின் பால பணிகள் குறித்தும் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details