சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இணைந்து கடன் உதவியை வழங்கினர். இதில், சென்னையில் உள்ள 719 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 10785 பேருக்கு 28.85 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
மேலும், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் தொழில் புரிய ஏதுவாக 50 பேருக்கு 5 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
புகழாரம்
இதனையடுத்து, மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "மகளிர் சுய உதவிக் குழுக்கள் முன்னேற்றம் மற்றும் மறுமலர்ச்சி என்பது கலைஞரின் ஆட்சிக்காலம் என்பது என்றால் மிகையாகாது, கடந்த 10 ஆண்டு காலமாக சோர்ந்து கிடந்த இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தற்பொழுது முதலமைச்சரால் புத்துயிர் பெற்றதுள்ளது என்றார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி கடந்த 13 ஆம் தேதி 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்களுக்கு 2750 கோடிக்கு சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவி தந்த பெருமை முதலமைச்சரைச் சாரும். திமுக ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் ஆகியுள்ளன. அதிலும் ஐந்து மாதங்கள் கரோனாவிற்காக செலவழிக்கப்பட்டது, அடுத்து பெருமழை வெள்ளம், அதில் தொடர்ந்து 35 நாட்கள் முதலமைச்சர் மக்களை சந்தித்தார்.
கஜானா காலி
கடந்த ஆட்சி காலத்தின் பொருளாதார பாதிப்பால் சென்னை மாநகராட்சியும் கடன் சுமையால் ஊழியர்களுக்குக் கூட சம்பளம் கொடுக்க முடியாத சூழல் நிலவியது. இதை அனைத்தையும் சமாளித்து கஜானா காலி, களஞ்சியம் காலி என்றாலும் தன்னுடைய நிர்வாகத்திறமை என்றும் காலியாக இருக்காது என்று முதலமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார் என புகழாரம் சூட்டினார்.
இதேபோல, ஆட்சிக்கு வந்த ஏழு மாதத்திலேயே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2750 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் என்பது இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் போல வேறு யாரையும் பார்க்க முடியாது" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: VIJAY DIWAS 2021: போர் நினைவுச் சின்னத்தில் ஸ்டாலின் மரியாதை