சென்னை: தமிழ்நாடு முழுவதும் 35-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (செப்.04) நடைபெற்றது. அனைவருக்கும் கரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 50ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறும்போது, ”நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் பல சுணக்கங்கள் இருந்த போதிலும், மக்களிடையே நோயின் தாக்கங்கள் இருந்த போதிலும், அரசு எடுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 96.26 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 90.15 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் பெரிய ஆர்வம் காண்பிக்கவில்லை. கரோனா பாதிப்பு அதிகமாக இல்லாததும் இதற்கு ஒரு காரணம். தமிழ்நாட்டில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் .சுமார் 26 லட்சம் பேர் முதல் தவணையும், 86 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும், 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். உலகளவில் கரோனா அச்சுறுத்தல் இன்றும் உள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக உள்ளது. எனவே தமிழ்நாடு தன்னை தற்காத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. பொதுமக்கள் தயங்காமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும். 18 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்களுக்கு செப்டம்பர் 30 வரை இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் . சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கான சட்டமசோதாவில் திருத்தங்கள் வேண்டும் என கடிதம் எழுதி இருந்தனர்.