சென்னை: தேனாம்பேட்டையைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் என்பவர் தனக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரான தனக்கு 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரி ரூ.3,695 வசூலிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அரையாண்டிற்கு 7,170 ரூபாயாக உயர்த்தி ஜூன் 28 ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு முரணானது என்றும் அதிகார வரம்பை மீறிய செயல் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து தெருக்கள், பகுதிகள் என அனைத்திற்கும் ஒரே மாதிரியான சொத்து வரி நிர்ணயித்துள்ளது சட்ட விரோதமானது. அதனால், தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.