பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சர்க்கரை ஆலை; திறப்பது குறித்து முடிவெடுக்க உத்தரவு!
அரசின் கொள்கை மற்றும் பொருளாதார அடிப்படையிலான விவகாரங்களில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
சென்னை: மயிலாடுதுறையில் மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பது குறித்து 8 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தலையனூரில் உள்ள என்.கே.பி.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன், கரும்புக்கு கிடைக்கும் குறைவான பணத்திற்காக அதிக சிரமம் அடைவதால், மூடப்பட்ட தலையனூர் சர்க்கரை ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி மோகன்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் அந்த பகுதியில் உள்ள ஒரே சர்க்கரை ஆலை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டதாகவும், 2013ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆலை திறக்கப்படும் என அறிவித்தும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், அரசின் கொள்கை மற்றும் பொருளாதார அடிப்படையிலான விவகாரங்களில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்துவிட்டனர்.
மேலும், ஆலையை எதற்காக திறக்க வேண்டும் என்பது தொடர்பான விரிவான விவரங்களை சர்க்கரை ஆலைகளின் ஆணையரிடம் மனுதாரரை கொடுக்க அறுவுறுத்திய நீதிபதிகள், அந்த மனுவை ஆணையர் பரிசீலித்து 8 வாரத்தில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.