தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆலகால விஷம் உண்டு உலகைக் காத்த சிவனின் மகா சிவராத்திரி!

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் இரவுதான் மகா சிவராத்திரி, இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரி 2022
மகா சிவராத்திரி 2022

By

Published : Feb 28, 2022, 8:09 AM IST

சென்னை:அனைத்து மாதங்களிலும் வரும் தேய்பிறை சதுர்த்தி இரவும் சிவராத்திரியாகும், சில சிவனடியார்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரிக்கும் விரதமிருந்து சிவனை வழிபடுகின்றனர். சிவனின் வழிபாட்டு விழாக்களான பிரதோஷம், சிவராத்திரி போன்றவை தென் இந்தியாவில் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

இதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வரும் மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தியில் தமிழ்நாட்டின் அனைத்துச் சிவாலயங்களிலும் சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

மகா சிவராத்திரி வழிபாடு நாளை (மார்ச் 1) நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் இந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடுவதற்கு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பல ஏற்பாடுகளைச் செய்துள்ளார். சிவராத்திரியன்று கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி ஏன், எப்படி?

மனிதப் பிறவி எடுத்தவர்களுக்கு முக்தி தரும் கடவுளாகக் கருதப்படுபவர் சிவபெருமான். அத்தகைய சிவனை வழிபாடு செய்யும் சிறப்பு நாள்தான் மாசி மகா சிவராத்திரி நாளாகும். இத்தகைய சிவராத்திரி உருவானதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டுவருகின்றன.

சாகா வரம் தரக்கூடிய அமிர்தத்தை எடுக்கத் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷத்தைச் சிவபெருமான் அருந்தி உலகைக் காத்த நாள் இந்த சிவராத்திரி நாளாகும்.

திருவண்ணாமலையில் சிவனின் அக்னி தரிசனம் கண்ட பிரம்மனையும், விஷ்ணுவையும் சிவன் தனது அடிமுடி கண்டுவருமாறு கூறினார். சிவனின் அடிமுடியைக் காண பிரம்மன் அன்னப் பறவையாகவும், விஷ்ணு வராகமாகவும் மாறி புறப்பட்டனர். இருவரின் முயற்சியும் முறிந்து விஷ்ணுவும், பிரம்மனும் சிவனைப் பணிந்த நாளும் இந்த சிவராத்திரி ஆகும். இது போன்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.

வழிபாட்டு முறைகள்

சிவராத்திரியன்று சிவலிங்கத்திற்கு வில்வ இலை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து நாள் முடிவில் பசுவிற்கு உணவு கொடுத்து வழிபட வேண்டும். இரவு நேரம் தூங்காமல் சிவ ஆலயங்களுக்குச் சென்று சிவனுக்கு நடக்கும் அபிஷேகங்கள், ஆராதனைகளைக் கண்டு வழிபட வேண்டும். சிவராத்திரியில் விரதமிருந்து வேண்டினால் நினைப்பது நடக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிங்க: மகா சிவராத்திரி: எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு அனைத்து சிவாலயங்களிலும்...!

ABOUT THE AUTHOR

...view details